Google Lens என்றால் என்ன?
Google Lens என்பது காட்சியின் அடிப்படையில் செயல்படும் கம்ப்யூட்டர் திறன்கள் அடங்கிய தொகுப்பாகும். இது நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் வார்த்தையையோ வாக்கியத்தையோ நகலெடுத்தல்/மொழிபெயர்த்தல், தாவரங்களையும் விலங்குகளையும் அடையாளம் காணுதல், மொழிகளையோ உணவு வகைகளையோ ஆராய்தல், தயாரிப்புகளைக் கண்டறிதல், ஒரேமாதிரி இருக்கும் படங்களைக் கண்டறிதல் போன்ற பல பயனுள்ள செயல்களைச் செய்யும்.
பார்ப்பவை குறித்துத் தேடுங்கள்
நீங்கள் பார்ப்பவை குறித்து Google Lens மூலம் தேடலாம். சாதனத்தில் உள்ள படம், கேமராவில் எடுக்கும் படம் என எந்தவொரு படமாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தி அதுபோன்றே இருக்கும் படங்களையும் அதுகுறித்த தகவல்களையும் நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் இருந்து தகவல்களை Lens சேகரித்து வழங்குகிறது.
Google Lens எவ்வாறு வேலை செய்கிறது?
Lens உங்கள் படத்தில் உள்ளவற்றை மற்ற படங்களுடன் ஒப்பிட்டு அந்தப் படங்கள் உங்கள் படத்தில் உள்ளவற்றுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன, தொடர்புடையதாக இருக்கின்றன என்பதன் அடிப்படையில் அவற்றைத் தரவரிசைப்படுத்துகிறது. தொடர்புடைய பிற முடிவுகளை இணையத்தில் கண்டறிய உங்கள் படத்தில் உள்ளவை குறித்த தனது புரிதலையும் Lens பயன்படுத்துகிறது. தரவரிசையையும் தொடர்புத்தன்மையையும் தீர்மானிக்க படத்திலுள்ள சொற்கள், மொழி, படம் இருக்கும் தளத்தின் பிற தரவுத்தகவல்கள் போன்றவற்றையும் Lens பயன்படுத்தலாம்.
ஒரு படத்தைப் பற்றி ஆராயும்போது பெரும்பாலும் பொருத்தமாக இருக்கக்கூடிய பல முடிவுகளை வழங்குவதுடன் அவை ஒவ்வொன்றின் தொடர்புத்தன்மையையும் Lens தரவரிசைப்படுத்தும். சில சமயங்களில், பொருத்தமாக இருக்கக்கூடிய இந்த முடிவுகளைப் பயன்படுத்தி Lens ஒற்றை முடிவை மட்டுமே வழங்கக்கூடும். உதாரணமாக, Lens மூலம் ஒரு நாயைப் படமெடுத்துத் தேடும்போது அது 95% ஜெர்மன் ஷெப்பர்டு எனவும் 5% கோர்கி எனவும் அடையாளம் காணப்படலாம். இவற்றில் அதிகம் பொருந்தக்கூடியதாக Lens தீர்மானிக்கும் ஜெர்மன் ஷெப்பர்டுக்கான முடிவை மட்டுமே Lens காட்டக்கூடும்.
மற்ற சமயங்களில், படத்தில் உள்ளவற்றில் எதைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதை Lens தெளிவாகப் புரிந்து கொண்டால் அது தொடர்பான தேடல் முடிவுகளை Lens வழங்கும். உதாரணமாக, படத்தில் ஜீன்ஸ், ஷூக்கள் போன்ற குறிப்பிட்ட தயாரிப்பு இருந்தால் அதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் அடங்கிய முடிவுகளையும் அதற்கான ஷாப்பிங் முடிவுகளையும் Lens வழங்கலாம். இத்தகைய முடிவுகளை வழங்க, தயாரிப்பிற்குப் பயனர்கள் வழங்கிய ரேட்டிங்குகள் போன்ற பிற விவரங்களையும் Lens பயன்படுத்தக்கூடும். அவை மட்டுமல்லாமல், படத்தில் பார்கோடு அல்லது ஏதேனும் வார்த்தையை Lens கண்டறிந்தால் (தயாரிப்பின் பெயர், புத்தகத்தின் தலைப்பு போன்றவை) அதற்கான Google Search முடிவுகள் பக்கத்தை Lens காட்டும்.
பொருத்தமான & பயனுள்ள முடிவுகள்
மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள முடிவுகளை வழங்கவே Lens எப்போதும் முயற்சி செய்கிறது. விளம்பரங்கள், வர்த்தகரீதியான பிற செயல்முறைகள் காரணமாக Lensஸின் அல்காரிதங்கள் பாதிக்கப்படுவதில்லை. Google Search, Shopping உள்ளிட்ட பிற Google தயாரிப்புகளின் ரேங்க்கிங் அல்காரிதங்களை அடிப்படையாகக் கொண்டே அந்தத் தயாரிப்புகளில் இருந்து கிடைக்கும் முடிவுகளை Lens காட்டுகிறது.
Lens மூலம் பொருத்தமான, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முடிவுகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் வெளிப்படையான பாலியல் தொடர்பான முடிவுகளை Lens அடையாளம் கண்டு வடிகட்டுகிறது. Google பாதுகாப்பான தேடல் வழிகாட்டுதல்கள் போன்ற Google முழுவதற்குமான தரநிலைகளைப் பயன்படுத்தி இந்த முடிவுகள் அடையாளம் காணப்படுகின்றன.
Lens & இருப்பிடத் தகவல்
உங்கள் இருப்பிடத் தகவலைப் பயன்படுத்த Lensஸை அனுமதித்தால் அது மிகத் துல்லியமான முடிவுகளை வழங்குவதற்காக அந்தத் தகவலைப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, இடங்களையும் இட அடையாளங்களையும் கண்டறியும்போது அந்தத் தகவல்களைப் பயன்படுத்தும். உதாரணத்திற்கு, நீங்கள் பாரிஸில் இருந்தால் உலகின் பிற பகுதிகளில் கோபுரம் போன்று இருக்கும் வேறு கட்டடங்களைவிட நீங்கள் ஈஃபில் கோபுரத்தைத் தேட வாய்ப்பு அதிகம் என்பதை Lens தெரிந்துகொள்ளும்.